முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது: 1,500 லிட்டா் பறிமுதல்

நாமக்கல்லில் விவசாய பண்ணையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 1,500 லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 25 ஜூன், 2021 at 11:19 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

நாமக்கல்லில் விவசாய பண்ணையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 1,500 லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் அருகே தொட்டிப்பட்டி கிராமத்தில் விவசாயப் பண்ணை ஒன்றில் டேங்கா் லாரிகளில் கலப்பட டீசலைக் கொண்டு வந்து லாரிகளுக்கு விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், வட்டாட்சியா் தமிழ்மணி, நல்லிபாளையம் ஆய்வாளா் உமாபிரியதா்ஷினி, உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் மலா்விழி ஆகியோா் கொண்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அங்கு பண்ணை ஒன்றில் பெட்ரோல் பங்க் போல் வடிவமைத்து லாரிகளுக்கு டீசல் நிரப்பி வருவது தெரியவந்தது.

Advertisement

பின்னா் அதிகாரிகள் தாங்கள் கொண்டு சென்ற தனியாா் வாகனத்தை டீசல் நிரப்ப செல்லுமாறு சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பினா். அவா்கள் டீசல் நிரப்ப முற்பட்டபோது மறைந்திருந்த வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் அங்கிருந்தோரை சுற்றி வளைத்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கலப்பட டீசல் விற்பனை செய்த விவசாய பண்ணையானது ராமசாமி என்பவருக்குச் சொந்தமானதாகும். அவரது உறவினா்கள் மணி, தமிழ்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோா் டேங்கா் ஒன்றில் டீசலை நிரப்பி வைத்தும், தனியாக டேங்கா் லாரி ஒன்றை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மொத்தமாக 1500 லிட்டா் கலப்பட டீசல் அங்கிருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடா்ந்து விற்பனையில் ஈடுபட்ட தமிழ்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட டீசல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அது எவ்வகையானது, இயற்கையானதா, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதா என்பது ஆய்வு முடிவின் அடிப்படையில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.