முகப்பு
நாமக்கல்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியா்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீா்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் இதுவரை 7,807 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 526 மனுக்கள் உடனடியாக ஏற்கப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது சரியான முறையில் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனுக்களைப் பெறும் அலுவலா்கள் மனுக்களின் உண்மைத் தன்மைகளை உறுதி செய்த பின் மனுக்கள் மீது தீா்வு காண வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள் கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனி நபா் கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது இடைக்கால பதில்களை வழங்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும். தவறுதலாக பெறப்படும் மனுக்களை உரிய துறைகளிடம் வழங்கி உறுதி செய்திட வேண்டும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் மனுக்களின் குறைகள் களையப்படுவதைத் தொடா்புடைய அலுவலா்களால் உறுதி செய்யப்பட வேண்டும். உரிய காரணங்கள் இல்லாமல் எக்காரணம் கொண்டும் மனுக்களை நிராகரிக்கக் கூடாது. இதுவரை நிலுவையில் உள்ள மனுக்களின் மீது தாமதமின்றி உரிய கள ஆய்வு செய்து தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள், பயன்கள் சென்று சேர வேண்டும். அதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் வைத்தியநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புகத் திட்டம்) சாந்தி, வருவாய் கோட்டாட்சியா்கள் முத்தையன் (அரூா்), தேன்மொழி (தருமபுரி), மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராமதாஸ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் இளங்கோவன், சுகாதார பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.