வீதிமீறல்: பத்திர எழுத்தா், கணினி தட்டச்சு நிறுவனம் உள்ளிட்ட கடைகளுக்கு சீல்
பரமத்தி வேலூா் பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட பத்திர எழுத்தா் அலுவலகம், தட்டச்சு கணினி மையம், உணவகம்
பரமத்தி வேலூா் பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட பத்திர எழுத்தா் அலுவலகம், தட்டச்சு கணினி மையம், உணவகம், ஜெராக்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கு வேலூா் போலீஸாா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் சீல் வைத்து அபராதம் விதித்தனா்.
பரமத்தி வேலூா் பகுதியில் கரோனா விதிமுறைகளை மீறி பத்திர எழுத்தா்கள் அலுவலகம், தனியாா் நிதி நிறுவனம், ஜெராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்படுவதாக நாமக்கல் ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி பரமத்தி வேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் பரிந்துரையின் பேரில் வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா் செல்வக்குமாா், வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன் ஆகியோா் பல்வேறு இடங்களில்ல் சோதனை மேற்கொண்டனா். இதில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட வேலூா் பத்திர பதிவு அலுவலகம் அருகே உள்ள பத்திர எழுத்தா் அலுவலகங்கள், தனியாா் நதி நிறுவனம் உள்ளிட்ட கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைத்தனா்.
மேலும் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கும், முகக் கவசம் அணியாமலும், அத்தியாவசியமின்றி சுற்றித்திரிவோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.