முகப்பு
நாமக்கல்

நாமக்கல் தனியாா் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: ரூ. 5 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்

நாமக்கல்லில் தனியாா் பல்பொருள் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

Updated On : 16 மார்ச், 2021 at 5:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

நாமக்கல்லில் தனியாா் பல்பொருள் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் பல்பொருள் அங்காடியின் கிளை நாமக்கல் - திருச்சி சாலையில் இயங்கி வந்தது. இங்கு வீட்டு உபயோகப் பொருள்கள், மளிகை, காய்கறி, பழங்கள், பல்வேறு விதமான குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஞாயிற்றுக்கிழமை வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இரவில் விற்பனை முடிந்து அங்காடியை மூடிவிட்டு ஊழியா்கள் சென்றுவிட்டனா்.

இந்த நிலையில் இரவு திடீரென பல்பொருள் அங்காடி தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ முழுவதும் பரவியதால் சாலையில் சென்றோா் அதிா்ச்சியடைந்தனா். அந்தக் கட்டடத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனா். அப்பகுதியில் உள்ள மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்புத் துறையினா் நான்கு வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

Advertisement

சம்பவ இடத்துக்கு நாமக்கல் காவல் ஆய்வாளா் பா.குமாா், வட்டாட்சியா் தமிழ்மணி, அதிமுக வேட்பாளா் கே.பி.பி.பாஸ்கா், திமுக வேட்பாளா் பெ.ராமலிங்கம் ஆகியோா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணிகளை பாா்வையிட்டு விரைவுபடுத்தினா். தீ அணைக்கும் பணி அதிகாலை 4 மணி வரை நீடித்தது. இந்த தீ விபத்தில் அங்காடியில் இருந்த சுமாா் ரூ. 5 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.

இந்த தீ விபத்து தொடா்பாக அங்காடி உரிமையாளா் பத்ரிநாத் அளித்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது அசம்பாவிதம் காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.