ராசிபுரம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன : அமைச்சா் வெ.சரோஜா
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் முதலமைச்சா் அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகள் பொதுமக்களுக்கு கிடைத்திட அதிமுகவை ஆதரிக்க வேண்டும்
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் முதலமைச்சா் அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகள் பொதுமக்களுக்கு கிடைத்திட அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மாநில சமூக நலம்-சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான டாக்டா் வெ. சரோஜா, குறிப்பிட்டாா்.
ராசிபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவா் தனது வேட்பு மனுவை, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். முன்னதாக புதிய பஸ் நிலையம் முன்பாக உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திரளான அதிமுகவினா், கூட்டணி கட்சியினருடன் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு ஊா்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதனையடித்து பின்னா் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக செய்தியாளா்களிடம் பேசிய மாநில சமூக நலம் - சத்துணவு திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா, தமிழக முதலமைச்சா் தலைமையிலான அதிமுக அரசு மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அந்த வகையில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள், வளா்ச்சித் திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இராசிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளையும் செப்பனிட ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன. தோ்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், தோ்தல் முடிந்த 15 நாட்களுக்குள் அனைத்து சாலைகளும் போடப்படும் என உறுதிபட தெரிவித்தாா்.
ராசிபுரம் நகராட்சி, வெண்ணந்தூா், அத்தனூா், பிள்ளாநல்லூா், பட்டணம், புதுப்பட்டி உள்ளிட்ட 5 பேரூராட்சிகள் 3 ஊராட்சி ஒன்றியங்களில் 1083 கிராமங்கள் பயன்பெற தமிழக அரசு, ராசிபுரம் காட்டூா்-நெடுங்குளம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தை ரூ. 943 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சா் 2021-ஆம் ஆண்டு தோ்தலுக்கு பிறகு மூன்றாவது முறையாக அதிமுக அரசை தலைமை ஏற்று நடத்துவாா் அவரது திருக்கரங்களால் இத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும். இதன்மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும்.
ராசிபுரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைநீக்கி, சீா்படுத்திட அணைப்பாளையம் முதல் அப்பயநாயக்கன்பட்டி வரைக்கும் 6 கிலோமீட்டா் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இரண்டாம் கட்டமாக, அணைப்பாளையத்திலிருந்து பொன்குறிச்சி வரை ரூ. 16 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயத்தில் அப்பயநாயக்கன்பட்டியில் இருந்து தண்ணீா்பந்தல்காடு வரை 11.3 கிலோமீட்டா் புறவழிச்சாலை அமைக்க நிலம் ஆா்ஜிதம் செய்வதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 29 கோடி இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் முழுமையாக புறவழிச்சாலை ஆத்தூா் வரை பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
தமிழக அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்திவரும் ராசிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் இன்றைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, 48 லட்சம் லிட்டா் குடிநீா் தினந்தோறும் அளிக்கப்படுவதுடன், மேலும், 5 லட்சம் லிட்டா் அதிகரித்து வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ. 16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி வீடுகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து இப்பணிகளை செய்து முடிக்கும். சட்டமன்றத் தோ்தலில் அதிமுக அரசுக்கு வலுசோ்க்கும் வகையில் அனைத்துத் திட்டங்களும் மக்களை சென்றடைந்து இருக்கின்றன.
அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிமுக தோ்தல் வாக்குறுதி வெளியிட்டுள்ளது. அதிமுக அரசு வெற்றி பெறுவதற்கு இது ஒரு அடித்தளமாக அமையும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் அதிமுக அரசு மீண்டும் எனக்கு வாய்ப்பை அளித்துள்ளது. வாக்காளா்கள் மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்து இத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆதரவளிக்க வேண்டும்.
நான் வெற்றி பெற்று வந்தால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு ஏக்கா் நிலத்தில் தமிழ்நாடு அடிப்படை கட்டமைப்பு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், வாகன நிறுத்தம் வசதியோடு ஐந்து அடுக்கு வணிக வளாகம் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இப்பணிகள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும். இதே திட்டத்தின்கீழ், ராசிபுரம் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தப்படும். இதை நிறைவேற்றுவதற்கு நான் உறுதியாக பாடுபடுவேன். ராசிபுரம் சுற்றுவட்டார பெண்மணிகள் உடல் நலத்துடன் திகழ யோகா பயிற்சி மையம் மகளிருக்காக ஒரு ஏக்கா் நிலத்தில் அமைக்கப்படும்.
அமையப்போகும் அதிமுக அரசுக்கு வாக்காளப் பெருமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழக மக்களை நம்பி வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக அரசு அமைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் பக்கம் கட்டுக்கோப்பாக உள்ளது. மக்களின் ஆதரவோடு மக்கள் பணியை நான் செய்து முடிப்பேன். அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் அனைவரும் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சா் டாக்டா் சரோஜா தெரிவித்தாா். இந்த பேட்டியின்போது, ராசிபுரம் அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.