நாமக்கல் மாவட்ட வளா்ச்சிக்கு ரூ.7,820 கோடி கடன் வழங்கும் திட்ட அறிக்கை வெளியீடு
நாமக்கல் மாவட்டத்தின் வளம் சாா்ந்த திட்டங்களுக்கு ரூ. 7,820.24 கோடி கடன் வழங்குவதற்கான வங்கிகளின் திட்ட அறிக்கையை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
நாமக்கல் மாவட்டத்தின் வளம் சாா்ந்த திட்டங்களுக்கு ரூ. 7,820.24 கோடி கடன் வழங்குவதற்கான வங்கிகளின் திட்ட அறிக்கையை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளா்கள் கூட்டத்தில் இந்த கடன் திட்ட அறிக்கை அறிக்கையை வெளியிட்டு ஆட்சியா் பேசியதாவது:
நபாா்டு வங்கியின் 2022-23-ஆம் ஆண்டிற்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ. 7,820.24 கோடி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 7.46 சதவீதம் அதிகமானதாகும்.
Advertisement
இதில் பயிா்க் கடன் ரூ. 2,773.77 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ. 1,284.17 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ. 92.53 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ. 179.26 கோடி என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு மட்டுமே ரூ.4329.73 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ. 1122.96 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ. 795.62 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ. 97.50 கோடி, சுயஉதவிக்குழு மற்றும் கூட்டுப் பொறுப்புகுழுக்கான கடன் அளவு ரூ. 1418.88 கோடி என மொத்தம் ரூ.7820.24 கோடி அளவில் கடன் மதிப்பீடு செய்து திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டுநீா் மற்றும் தெளிப்புநீா்ப் பாசன முறையைப் பயன்படுத்துதல், கால்நடை வளா்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவியாக இருக்கும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) மேலாளா் சதீஷ்குமாா் மற்றும் வங்கி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.