இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சா் பங்கேற்பு
பரமத்தியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பயனாளிகளுக்கு ரூ. 31.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் வியாழக்கிழமை வழங்கினாா்.
பரமத்தியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பயனாளிகளுக்கு ரூ. 31.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் இலங்கை தமிழா் முகாம்களை, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் என்று பெயா் மாற்றம் செய்து அறிவித்ததோடு, அவா்களின் மறுவாழ்வுக்காக 12 நலத் திட்டங்களை அறிவித்தாா்.
அதன் அடிப்படையில் பரமத்தி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, வியாழக்கிழமை முகாம் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஷ்குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் கலந்துகொண்டு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 408 குடும்பங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ. 19 லட்சத்து 88 ஆயிரத்து 675 மதிப்பிலான துணி, பாத்திரங்கள், 13 குடும்பங்களுக்கு ரூ. 47,411 மதிப்புள்ள விலையில்லா எரிவாயு இணைப்பையும் வழங்கினாா்.
சமுதாய முதலீட்டு நிதி பெறும் 9 மகளிா் குழுக்களுக்கு தலா ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 11 லட்சத்து 25 ஆயிரத்தை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி, பரமத்திவேலூா் வட்டாட்சியா் அப்பன்ராஜ், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியா் சுந்தரவல்லி, திமுக-வைச் சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, பேரூா் கழக பொறுப்பாளா்கள், அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்