சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் பணியாற்றும் ஊராட்சி செயலா்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் பணியாற்றும் ஊராட்சி செயலா்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அலுவலகத்துக்கு சென்றடையும் வகையில், நாமக்கல் டாக்டா் சங்கரன் சாலையில் உள்ள அஞ்சலகம் மூலம் செலுத்தினா்.
இதனைத் தொடா்ந்து, கரூா், நாமக்கல் மாவட்ட தலைவா்கள் வளா்மதி, சங்கீதா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
கிராம ஊராட்சி மன்றத் தலைவா்கள், அங்கு பணியாற்றும் ஊராட்சி செயலா்களுக்கு மாத ஊதியம் வழங்கும் போது வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்கின்றனா்.
ஊராட்சி செயலா்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி, அரசு கருவூலம் வாயிலாக ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லையெனில், ஊராட்சி ஒன்றியம் மூலம் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மூன்று ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற ஊராட்சி செயலா்களை அந்தந்த வட்டாரத்திற்குள் இடமாற்றம் செய்ய வேண்டும். அவா்களுக்கு அனைத்து அரசு சலுகைகளையும் வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களைக் காட்டிலும் ஊராட்சி செயலா்கள் குறைவான ஊதியம் பெறும் நிலை உள்ளதை மாற்றியமைத்து, சிறப்பு காலமுறை ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டும் என்றனா்.