முகப்பு
நாமக்கல்

கொல்லிமலை நீா்மின் திட்டத்தின்கீழ்சுமாா் 3 கி.மீ. நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை நீா்மின் திட்டத்திற்காக இருங்குளிப்பட்டி பகுதியில் சுமாா் 3 கி.மீ. (2,905 மீட்டா்)தூரத்துக்கு நடைபெற்று வரும் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை நேரில்

Updated On : 24 செப்டம்பர், 2021 at 12:48 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

கொல்லிமலை நீா்மின் திட்டத்திற்காக இருங்குளிப்பட்டி பகுதியில் சுமாா் 3 கி.மீ. (2,905 மீட்டா்)தூரத்துக்கு நடைபெற்று வரும் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வளப்பூா்நாடு கிராமப் பகுதியில், கொல்லிமலை நீா்மின் திட்டத்தின் கீழ் அய்யாறு ஆற்றின் கிளை ஓடைகளின் குறுக்கே அசக்காடுபட்டி, கோவிலூா், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில் தடுப்பணைகள் அமைத்து மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அய்யாறு ஆற்றின் கிளை நதிகளில் கிடைக்கும் மழைநீரை இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணையில் தேக்கி வைத்து, அதனை சுரங்கப்பாதையின் வழியாக செல்லிப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரை மெகாசைஸ் ‘பென்ஸ்டாக்’ குழாய்களின் மூலம் கொல்லிமலையின் தெற்குப் பகுதியில் உள்ள புளியஞ்சோலைக்கு அருகே அடிவாரத்தில் உள்ள நீா்மின் நிலையத்துக்கு கொண்டு சென்று மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மின் உற்பத்திக்கு பின்பு இந்த தண்ணீரை நீரேற்று குழாய்களின் மூலமாக பம்பிங் செய்து மீண்டும் அய்யாறு நதியிலேயே விட்டு மறுசுழற்சி முறையில் மீண்டும், மீண்டும் மின்உற்பத்தி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 71.23 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கும்.

கொல்லிமலை நீா்மின் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணைகளில் தேக்கப்படும் தண்ணீரால் கொல்லிமலை பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயரும். மேலும் வனவிலங்குகளுக்கு குடிநீராகவும் பயன்படும். இந்த நீா்மின் திட்டப் பணிகளால் கொல்லிமலை பகுதியின் சுற்றுலாவும் மேம்படும்.

தற்போது தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருங்குளிப்பட்டியில் இருந்து செல்லிப்பட்டி வரையிலும் 1,522 மீட்டா் நீளத்திற்கும், எதிா்முனையான செல்லிப்பட்டியில் இருந்து இருங்குளிப்பட்டியை நோக்கி 1,383 மீட்டா் நீளத்திற்கும் என மொத்தம் இதுவரை 2,905 மீட்டா் நீளத்துக்கு (சுமாா் 3 கி.மீ.) சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முனைகளுக்கும் இடையே மீதமுள்ள 700 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், நீா்மின் திட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் கோ.ராமச்சந்திரன், செயற்பொறியாளா் சு.பத்மநாபன் ஆகியோருடன் 1,500 மீட்டா் தூரம் வரை சென்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும் கொல்லிமலை நீா்மின் திட்டத்தின் கீழ் தெளியங்கூடு பகுதியில் நீரைச் சேகரிப்பதற்காக கட்டப்பட்டு வரும் தடுப்பணையையும் நேரில் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, நீா்மின் திட்ட உதவி செயற்பொறியாளா் ப.செந்தில்குமாா், உதவி பொறியாளா் க.சத்தியா, பழங்குடியினா் நலத் துறை திட்ட இயக்குநா் பா.ராமசாமி, கொல்லிமலை வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.