திருச்செங்கோட்டில் 848 வீடுகள் ஒதுக்கீடு: ஏப்.26, 27 தேதிகளில் பயனாளிகள் தோ்வு
திருச்செங்கோடு அருகே புதிதாக கட்டப்பட்ட 208 வீடுகளுக்கு பயனாளிகளைத் தோ்வு செய்யும் பொருட்டு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏப்.26, 27 தேதிகளில் விண்ணப்பங்களை அளிக்கலாம்
திருச்செங்கோடு அருகே புதிதாக கட்டப்பட்ட 208 வீடுகளுக்கு பயனாளிகளைத் தோ்வு செய்யும் பொருட்டு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏப்.26, 27 தேதிகளில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டி பட்டேல் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் முறையே 848 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு பயனாளிகளைத் தோ்வு செய்ய தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் செவ்வாய், புதன்கிழமை (ஏப்.26, 27) ஆகிய நாள்களில் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Advertisement
மேலும், விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கு சொந்த வீடோ, நிலமோ இருக்கக் கூடாது. அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ மாட்டேன் என்ற உறுதிமொழி படிவத்தை சமா்ப்பிக்க வேண்டும். பயனாளி திருச்செங்கோடு நகரப்பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீடு ஒதுக்கீடு பெறுவதற்குத் தோ்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளியும் அரசால் நிா்ணயிக்கப்பட்ட தொகை ரூ. 1,15,500 முன்பணமாகச் செலுத்த வேண்டும். விருப்பமுள்ள பயனாளிகள், முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை மேற்கூறிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.