துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கக் கோரி பாஜக வேட்பாளா் ஆட்சியரிடம் முறையீடு
ராசிபுரம் நகராட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.குமாா், தனக்கும், குடும்பத்தினருக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும்
ராசிபுரம் நகராட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.குமாா், தனக்கும், குடும்பத்தினருக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் வியாழக்கிழமை முறையிட்டாா்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சோ்ந்தவா் வி.குமாா்(56). வழக்குரைஞரான இவா் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், ராசிபுரம் நகராட்சி 27-ஆவது வாா்டில் பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா். வேட்பு மனுத் தாக்கலை தொடா்ந்து வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்தாா். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பிரசாரம் செய்து வந்த திமுக வேட்பாளா் கந்தசாமி என்பவரின் ஆதரவாளா்கள், பாஜக வேட்பாளா் குமாருக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த வேட்பாளா் குமாா், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து தோ்தலில் போட்டியிடுவதால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தனக்கும், குடும்பத்தினருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என முறையிட்டு மனு அளித்தாா்.