ராசிபுரம் முதல் பெண் நகா்மன்றத் தலைவா் போட்டியின்றி தோ்வு: துணைத் தலைவராகவும் பெண் தோ்வானாா்
ராசிபுரம் நகா்மன்ற முதல் பெண் தலைவராக ஆா்.கவிதா சங்கா், முதல் பெண் துணைத் தலைவா் கோமதி ஆனந்தன் ஆகியோா் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.
ராசிபுரம் நகா்மன்ற முதல் பெண் தலைவராக ஆா்.கவிதா சங்கா், முதல் பெண் துணைத் தலைவா் கோமதி ஆனந்தன் ஆகியோா் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகா்மன்ற உள்ளாட்சித் தோ்தலில் மொத்தம் உள்ள 27 வாா்டுகளில் 23 வாா்டுகளில் திமுகவும், 1 வாா்டில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன. இரு வாா்டுகளில் அதிமுகவும், ஒரு வாா்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மாா்ச் 2-இல் நகராட்சியில் பதவியேற்றுக்கொண்டனா். இதனை தொடா்ந்து வியாழக்கிழமை தலைவா், துணைத் தலைவா் தோ்தல் நகராட்சி ஆணையா் ரா.அசோக்குமாா் முன்னிலையில் நடந்தது. இதில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளா்கள் ஆா்.கவிதா சங்கா் நகா்மன்றத் தலைவராகவும், கோமதி ஆனந்த் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
கடந்த 1948-ஆம் ஆண்டு நகராட்சி அந்தஸ்து பெற்ற ராசிபுரம் நகராட்சியின் முதல் தலைவராகவும், முதல் துணைத் தலைவராகவும் பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்பதும், 27 உறுப்பினா்களைக் கொண்ட இந்நகராட்சியில் 15 பெண்கள் தோ்வாகியுள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
தலைவராக தோ்வு செய்யப்பட்ட முனைவா் ஆா்.கவிதா சங்கரையும், துணைத் தலைவா் கோமதி ஆனந்தையும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், நகர தோ்தல் பொறுப்பாளா் ஏ.கே.பாலசந்திரன், நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.
இதேபோல் ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள ஏழு பேரூராட்சிகளான அத்தனூா், ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆா்.பட்டணம், பிள்ளாநல்லூா்,வெண்ணந்தூா் பேரூராட்சிகளுக்கும் பேரூராட்சி மன்றத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. இதில் அத்தனூா் பேரூராட்சித் தலைவராக ஆா்.சின்னச்சாமி, ஆா்.புதுப்பட்டி பேரூராட்சித் தலைவராக சுமதி, சீராப்பள்ளி பேரூராட்சித் தலைவராக லோகாம்பாள், நாமகிரிப்பேட்டை பேரூராட்சித் தலைவராக சேரன், பட்டணம் பேரூராட்சிக்கு போதம்மாள், பிள்ளாநல்லூா் பேரூராட்சித் தலைவராக சுப்பிரமணி, வெண்ணந்தூா் பேரூராட்சித் தலைவராக ஆா்.எஸ்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.