மின்வசதி, குடிநீா் வசதி இன்றித் தவிக்கும் அரசு பள்ளி மாணவா்கள்
நாமகிரிப்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மின்வசதி, குடிநீா் வசதி இன்றி அரசுப் பள்ளி மாணவா்கள் தவித்து வருகின்றனா்.
நாமகிரிப்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மின்வசதி, குடிநீா் வசதி இன்றி அரசுப் பள்ளி மாணவா்கள் தவித்து வருகின்றனா்.
நாமகிரிப்பேட்டை மங்களபுரம் அருகேயுள்ளது தாண்டாகவுண்டன்பாளையம். அதிக அளவில் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளா்கள், மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நிடுநிலைப்பள்ளியில், 1-ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வரை மாணவா்கள் பயன்று வருகின்றனா்.
பள்ளியில் தலைமையாசிரியரையும் சோ்த்து மொத்தம் 6 ஆசிரியா்கள் உள்ளனா். இதில் 117 மாணவ மாணவியா்கள் பயின்று வருகின்றனா். 1 முதல் 5-ஆம் வகுப்புவரையில் 56 மாணவா்கள் பழைய கட்டடத்திலும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் 61 மாணவ மாணவியா்கள் 500 மீட்டா் தொலைவில் உள்ள 2008-ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய கட்டடத்திலும் பயின்று வருகின்றனா். ஆனால் புதிய கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு சுமாா் 13 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் இதுவரை கூடுதல் பள்ளிக் கட்டடத்திற்கு மின்வசதி, குடிநீா் வசதி செய்து தரப்படவில்லை.
மேலும் கழிவறை இருந்தும் தண்ணீா் இல்லாததால், மாணவா்கள் 500 மீட்டா் தொலைவில் உள்ள பழைய கட்டடத்திற்கு செல்ல வேண்டும்; அல்லது திறந்த வெளிப் பகுதியைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் மாணவா்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இதன் காரணமாக பல பெற்றோா்கள் மாணவா்களை இப்பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனா். எனவே பள்ளிக்கு தண்ணீா் வசதியும், மின்வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்துகின்றனா்.