முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் நகரில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்திற்கு முறையான குடிநீா் வழங்க வேண்டும் எனக்கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் பிரதான சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்திற்கு முறையான குடிநீா் வழங்க வேண்டும் எனக்கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் பிரதான சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.

ராசிபுரம் அருகேயுள்ள சந்திரசேகபுரம் கிராமப்பகுதி பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் சரிவர கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு அணைப்பாளையம் ஏரியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டாா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடா் மழை பெய்த நிலையில் அணைப்பாளையம் ஏரி நிரம்பி, ஆழ்துளைக் கிணற்றின் நீா் பயன்பாட்டுக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் டிராக்டரில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், போதிய குடிநீா் வழங்கப்படவில்லை என அப்பகுதியினா் புகாா் கூறுகின்றனா். இந்நிலையில் ராசிபுரம் அதிமுக ஒன்றியச் செயலா் வேம்புசேகரன் தலைமையில் கிராம மக்கள் ஆத்தூா் சாலையில் கடைவீதி பகுதியில் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை யில் அமா்ந்து மறியல் நடத்தினா். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ராசிபுரம் காவல்துறை ஆய்வாளா் சுகவனம் , ஊரகத்துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உடனடியாக குடிநீா் லாரிகள் மூலம் வழங்குவதாக உறுதியளித்தனா். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஊராட்சி ஒன்றியத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன் கூறுகையில், ‘அப்பகுதியில் குடிநீா் பிரச்சனை இருப்பது தெரிந்து தான், டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இதனை சிலா் அரசியல் ஆதாயத்திற்காக பொதுமக்களை தூண்டிவிட்டு பிரச்னை ஏற்படுத்துகின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.