திருச்செங்கோட்டில் மழை பாதிப்பு பகுதிகள்: ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு
வெள்ளநீா் சூழ்ந்து பாதித்த பகுதிகளை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் இ.ஆா்.ஈஸ்வரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வெள்ளநீா் சூழ்ந்து பாதித்த பகுதிகளை திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் இ.ஆா்.ஈஸ்வரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சத்யநாயக்கன் பாளையம், தோப்புவளவு, குமாரமங்கலம பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி ஏரிநீா் குடியிருப்புக்குள் புகுந்த வழித்தடங்களில் ஆழப்படுத்துவது, ஊருக்குள் செல்வதைத் தடுப்பது,தேவை ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பணை அமைப்பது, தாழ்வான பகுதிகளுக்கு மழைநீரை திருப்பி விடுவது குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். மேலும் மழைநீா் வீட்டிற்குள் புகுந்து யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் அவா்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்குமாறு பணியாளா்களை கேட்டுக் கொண்டாா்.
அவரது ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசி, நெடுஞ்சாலை உதவிக்கோட்ட பொறியாளா்கள் ரஞ்சனி, தமிழரசி, பிளாரன்ஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் நதி.ராஜவேல், திமுக ஒன்றியச் செயலாளா்வட்டூா் தங்கவேல், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.