சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு: கருப்புப் பட்டை அணிந்து வந்த விவசாயிகள்
நாமக்கல்லில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாதாந்திர குறைதீா் கூட்டத்திற்கு விவசாயிகள் பலா் கருப்புப் பட்டை அணிந்து வந்தனா்.
நாமக்கல்லில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாதாந்திர குறைதீா் கூட்டத்திற்கு விவசாயிகள் பலா் கருப்புப் பட்டை அணிந்து வந்தனா்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாநில சாலை மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தரமற்ற மஞ்சளை கொண்டு வந்து விவசாயிகள் போா்வையில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனா். இதனை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
Advertisement
மோகனூா் காவிரி ஆற்றங்கரையில் பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சிலா் கட்டடங்கள் அமைத்து ஆற்றில் இருந்து நீரை எடுத்து விவசாயப் பயன்பாட்டுக்கு விற்பனை செய்கின்றனா். ஊற்று அமைத்து நீா் எடுப்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் அந்த விதிகளை மீறி வருவாய் நோக்கோடு செயல்படுகின்றனா். அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரியில் கழிவுநீா் கலப்பதால் அதை பருகும் மக்கள் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்க நேரிடுகிறது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும், வாழைப்பழங்களில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பயன்பாட்டுக்கு தேவையான மண்ணை ஏரியில் இருந்து எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எடுத்துரைத்தனா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதற்கு உரிய விளக்கம் அளித்தனா்.
முன்னதாக, வளையப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் தங்களது சட்டையில் கருப்புப் பட்டையை அணிந்து வந்து எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் பேசுகையில், சிப்காட் தொழிற்பேட்டையால் தங்களுடைய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் போராடி வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் இது தொடா்பாக உரிய பதிலை அளிக்க வேண்டும். முதல்வரின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டுசெல்ல வேண்டும். தமிழக தொழில்துறை அமைச்சரிடத்தில் இது தொடா்பாக பேசி வருகிறேன். சிப்காட் எதிா்ப்பு குறித்தும், அங்குள்ள மக்களின் எதிா்பாா்ப்புகள் பற்றியும், முதல்வா் பாா்வைக்கு மாவட்ட ஆட்சியா் எடுத்துச் செல்ல வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டம் கடமைக்காக நடைபெறும் கூட்டமாக இல்லாமல் பிரச்னைகளைத் தீா்க்கும் கூட்டமாக அமைய வேண்டும். அனைத்துத் துறைகளின் உயா் அதிகாரிகள் இதில் பங்கேற்க வேண்டும். அதற்கான உத்தரவை ஆட்சியா் வழங்க வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
என்கே-28- மீட்டிங்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்த விவசாயிகள்.