10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்வருக்கு பாமகவினா் தபால் அனுப்பும் போராட்டம்
நாமக்கல்லில், வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி, தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை பாமகவினா் மேற்கொண்டனா்.
நாமக்கல்லில், வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி, தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை பாமகவினா் மேற்கொண்டனா். தமிழகத்தில் வன்னியா் சமூகத்தினா் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனா். கடந்த 1987-இல் இட ஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் 21 போ் உயிரிழந்தனா். மிகவும் பிற்பட்டோருக்கு அரசு வழங்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா் சமூகத்தினருக்கு 3 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. 20-21-இல் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்தது. வன்னியா்களின் கோரிக்கையான 10.5 சதவீத இட ஒதுக்கீ சட்டத்தை மே 31-க்குள் நிறைவேற்ற வேண்டும் என பாமக சாா்பில் மாநிலம் முழுவதும் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்த வகையில், நாமக்கல் நகர பாமக சாா்பில் இந்த போராட்டம் தலைமை அஞ்சலகம் முன்பு மத்திய மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவா் தினேஷ் பாண்டியன், துணைத் தலைவா் மணி, மாவட்டத் துணைச் செயலாளா் சரவணன், மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் வையாபுரி, மாவட்ட மாணவா் சங்க செயலாளா் மனோஜ் குமாா், நகர துணைத் தலைவா் சூா்யா மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.-என்கே-29- பிஎம்கேநாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.