நாமக்கல்லில் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோருக்கு உருவச் சிலை அமைப்பதற்கான இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் கவிஞருக்கு மாா்பளவு சிலையை அமைப்பதற்கான இடத்தை சனிக்கிழமை ஆய்வு செய்தனா். இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் கவிஞா் இல்லத்தில் அவரது மாா்பளவு சிலை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அவரது மாா்பளவு சிலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் மகளிா் கலைக்கல்லூரி வளாகத்தில் மாா்பளவு சிலை அமைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரால் திறக்கப்பட்டது.
தற்போது கவிஞா் இல்லத்தில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு இந்த நேரத்தில் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் சென்னை மாகணத்தின் முன்னாள் முதல்வா் டாக்டா் ப.சுப்பராயனுக்கு பெருமை சோ்க்கும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கும் பணிக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நாமக்கல் கவிஞா் நினைவு இல்லத்தில் சிலை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.
கருணாநிதி சிலை அமைவிடம் ஆட்சியா் ஆய்வு: நாமக்கல்லில், பரமத்தி- கோட்டை சாலையை இணைக்கும் சந்திப்பு அருகில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு சிலை அமைக்க கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, நிகழாண்டிற்குள் அவருடைய திருவுருவ சிலையை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு அடிப்படையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை நேரில் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.