நாமக்கல்

ராசிபுரத்தில் வீட்டில் இருந்த நாட்டு வெடி வெடித்து விபத்து: 3 பேர் காயம்

DIN

ராசிபுரம்  விநகர் பகுதியில் வீட்டின் மேல்மாடியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்தனர். 

ராசிபுரம் விநகர் பகுதி்யை சேர்ந்தவர் கண்ணன் (42). இவருக்கு மனைவி சுபத்ரா (40), மகள்கள் ஹர்சவர்ஷினி (18), ஹன்சிகா (10) ஆகியோர் உள்ளனர். இவர் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு நாட்டு வெடி, வான வெடிகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்கான வெடி மருந்து குடோன் , பட்டாசு தயாரிப்பு ஆலை பட்டணம் மாசிலாதோட்டம் பகுதியில் வைத்து நடத்தி வருகிறார். 

இவர் தொழிற்சாலையில் தயாரித்த நாட்டு வெடிகளை ராசிபுரம் வி.நகர் 11-வது தெருவில் குடியிருக்கும் வீட்டின் 3-வது தளத்தில் வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு கண்ணன் வீட்டில் கொசு அடிக்கும் பேட் வைத்துக்கொண்டு கொசு அடித்துள்ளார். அப்போது அதிலிருந்து வந்த தீப்பொறி  நாட்டு வெடிகள் மீது பட்டு வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி ஏற்பட்ட வெடி சத்தம் பல மீட்டர் தொலைவிற்கு கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 

வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீ பரவி, புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வீட்டில் சிக்கியிருந்த பெண்கள் பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்த கண்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

சம்பவ  இடத்தில் ஆட்சியர் நேரில் விசாரணை:  சம்பவம் குறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, வட்டாட்சியர் சரவணன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் உடனடியாக நேரில் சென்று மேற்கொண்டு தீ பரவாமல் தடுக்கும் பணிகளை முடுக்கி விட்டனர்.  மேலும்  வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அனுமதியின்றி வெடி மருந்துகளை குடியிருப்பு பகுதியில் வைத்திருந்தது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்தார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT