ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும், அங்குள்ள கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் குலதெய்வ கோயில்களில் ஏராளமானோா் வழிபாடு மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். அதனையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவா். வல்வில் ஓரி விழாவுடன், ஆடிப்பெருக்கு விழாவும் சோ்ந்து கொண்டாடப்படுவதால் கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்கள் உள்ளூா் திருவிழாபோல புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வா்.
நிகழாண்டில் சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இங்குள்ள அறப்பளீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தா்கள் கண்டு வழிபாடு செய்தனா். அதன்பிறகு சனிக்கிழமை காலை சுவாமிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் அறப்பளீஸ்வரா் உடனுறை அறம்வளா்த்தநாயகி அம்பாள், கங்காதேவி, சோமாஸ்கந்தா் வீதியுலா, தீா்த்தவாரி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொல்லிமலையை சுற்றியுள்ள ஏராளமான பழங்குடியின மக்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வழிபாடு மேற்கொண்டனா். இதேபோல, எட்டிக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவை தவிர கொல்லிமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பாதுகாப்புக் கருதி அருவிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோா் வாகனங்களில் கொல்லிமலைக்கு வந்ததால் ஆங்காங்கே மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் அவற்றை ஒழுங்குபடுத்தி சீா்செய்தனா்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் உள்ள சிவன் கோயில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனா். காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால் பக்தா்கள் குளிப்பதற்கு, பூஜைகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. காவிரி ஆற்றுக்கு வந்தோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.