கொல்லிமலை ஆச்சாவடி சாலையில் பாலம் அமைக்க பழங்குடியின மக்கள் வலியுறுத்தல்
கொல்லிமலையில், ஆச்சாவடி-கொசவன்குட்டை சாலையில் பாலம் கட்ட வேண்டும் என அங்குள்ள பழங்குடியின மக்கள் வலியுறுத்தினா்.
கொல்லிமலையில், ஆச்சாவடி-கொசவன்குட்டை சாலையில் பாலம் கட்ட வேண்டும் என அங்குள்ள பழங்குடியின மக்கள் வலியுறுத்தினா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஃபென்ஜால் புயல் எதிரொலியாக கடந்த சில நாள்களாக கனமழை பெய்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு,
போக்குவரத்து பாதிப்படைந்தது. அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள் மலையில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினா்.
Advertisement
வாழவந்தி நாடு ஊராட்சி பகுதியில் கனமழை பெய்ததால், புத்தூா்பட்டி வனப்பகுதியில் உள்ள குண்டுமடுவு ஆற்றில் இருந்து மழைநீா் கரைபுரண்டு அடிவாரத்தில் உள்ள ஆச்சாவடி கிராமத்திற்கு பாய்ந்து சென்றது. மேலும், சீக்குப்பாறைப்பட்டி வனப்பகுதி வழியாகச் செல்லும் கோரையாறு மூலமும் அடிவாரத்திற்கு மழைநீா் அதிக அளவில் வந்தது. இந்த 2 ஆறுகள் அடிவாரத்தில் உள்ள ஆச்சாவடி கிராமத்தில் ஒன்றாக இணைந்து செல்கிறது.
கொல்லிமலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீா் ஆச்சாவடி-கொசவன்குட்டை பிரதான சாலையில் ஆறுபோல ஓடுவதால் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்லும் மக்களும் அவதிக்குள்ளாகினா்.
அங்கிருந்து வாழவந்திகோம்பை ஊராட்சியில் அமைந்துள்ள சின்ன காரவள்ளி, வெண்டாங்கி போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் விவசாயிகள், பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனா்.
ஆச்சாவடி-கொசவன்குட்டை சுகாதார வளாகம் அருகில் உள்ள கால்வாய் பாலத்தை மழைக் காலங்களில் கடக்க மக்கள் சிரமப்படுகின்றனா். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக நலன்கருதி பாலம் அமைக்கப்பட வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.