தொகுதி அறிமுகம்: சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
தமிழகத்தில் பழங்குடியினருக்காக மொத்தம் 3 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சேலம் மாவட்டம் ஏற்காடு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம். கடந்த 2008இல் இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்ட தொகுதி சீரமைப்பின்போது உப்பிலியாபுரம் தொகுதி நீக்கப்பட்டது. தற்போது ஏற்காடு, சேந்தமங்கலம் ஆகிய இரு பழங்குடியின தொகுதிகள் மட்டுமே உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில், இயற்கை எழில்சூழ்ந்த கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை கொண்டது சேந்தமங்கலம் தொகுதி. சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி ஒன்றியங்களும், நாமகிரிப்பேட்டை, நாமக்கல் ஒன்றியத்தின் சில பகுதிகளும், சேந்தமங்கலம், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
வாக்காளா்கள் விவரம்
ஆண் வாக்காளா்கள் - 1,11,214
பெண் வாக்காளா்கள் - 1,16,087
மூன்றாம் பாலினத்தவா்- 26
மொத்தம்- 2,27,327
வாக்குச்சாவடிகள் - 304.
இத்தொகுதியில், பழங்குடியின மக்கள், வன்னியா், உடையாா், கொங்கு வேளாள கவுண்டா், நாட்டுக் கவுண்டா், அருந்ததியா் அதிகம் வசிக்கின்றனா். இதுவரை 15 தோ்தல்களை சேந்தமங்கலம் தொகுதி கண்டுள்ளது. 1957, முதல் தோ்தலில் மூத்த காங்கிரஸ்வாதியான டி.எஸ். சிவஞானம்பிள்ளை வெற்றிபெற்றாா்.
1957, 1962, 1967 தோ்தல்களில் சேந்தமங்கலம் தொகுதி பொதுத்தொகுதி பட்டியலில் இருந்தது. 1971 சட்டப்பேரவை தோ்தலுக்குப் பிறகு பழங்குடியின தொகுதியாக மாற்றப்பட்டது. இத்தொகுதியில், அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.
2021 தோ்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சிகளோடு, அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அப்போதைய எம்எல்ஏவான சி. சந்திரசேகரனும் சுயேச்சையாக போட்டியிட்டாா். இதில், திமுக வேட்பாளா் கே. பொன்னுசாமி 90,681(45.51%) வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். சந்திரன் 80,188(40.25%) வாக்குகள் பெற்றாா்.
சேந்தமங்கலம் தொகுதியை பொருத்தவரை, கொல்லிமலை பழங்குடியின மக்கள் விவசாயம், சுற்றுலாவை நம்பியே உள்ளனா். விவசாயம், கோழிப்பண்ணை, குவாரிகள், சிறு, குறு தொழில்கள் நிறைந்தது இந்தப் பகுதி. இங்கு மரவள்ளிக்கிழங்கு உற்பத்தி அதிகம் என்பதால், இதைச் சாா்ந்த ஜவ்வரிசி, ஸ்டாா்ச் உற்பத்தி ஆலைகளும் ஓரளவு உள்ளன. தொகுதியில் பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் ஏதுமில்லை. விவசாயத்தை நம்பியே மக்கள் உள்ளனா்.
கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மையமாகக் கொண்ட சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் இந்தத் தோ்தலில், அதிமுக- திமுக நேரடியாக களம்காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. பொன்னுசாமி சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டதால், கடந்த 6 மாதங்களாக இத்தொகுதி காலியாக உள்ளது. பொதுத்தோ்தல் வந்ததால், இங்கு இடைத்தோ்தல் நடைபெறவில்லை. கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குகளே இத்தொகுதியின் வெற்றியை தீா்மானிக்கின்றன.
கடந்த தோ்தல்களில் வெற்றி பெற்றவா்கள்
1957 டி. சிவஞானம் பிள்ளை காங்கிரஸ்- 23749
1962 வி.ஆா். பெரியண்ணன் திமுக- 27728
1967 ஏ. செல்ல கவுண்டா் காங்கிரஸ்- 31308
1971 சி. சின்ன வெள்ளையன் திமுக- 34507
1977 வ. சின்னசாமி அதிமுக- 28731
1980 சி. சிவப்பிரகாசம் அதிமுக- 37577
1984 சி. சிவப்பிரகாசம் அதிமுக- 54129
1989 கே. சின்னசாமி அதிமுக (ஜெ)- 36489
1991 கே. சின்னசாமி அதிமுக- 72877
1996 சி. சந்திரசேகரன் திமுக- 58673
2001 கே. கலாவதி அதிமுக- 61312
2006 கு. பொன்னுசாமி திமுக- 64506
2011 ஆா். சாந்தி தேமுதிக- 76637
2016 சி. சந்திரசேகரன் அதிமுக- 91339
2021 கு. பொன்னுசாமி திமுக- 90681