நாமக்கல்: ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாணவா்கள் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதியை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாட வேண்டும் எனவு தமிழக முதல்வா் 2021 அக்டோபா் 30இல் தெரிவித்தாா்.
மாவட்ட அளவில் அனைத்து அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கிடையே கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஜூலை 9-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகளுக்கு ஆட்சிமொழி தமிழ் என்ற தலைப்பும், பேச்சுப்போட்டிக்கு, குமரி தந்தை மாா்சல் நேசமணி, தென்னாட்டு பொ்னாட்ஷா அண்ணா, கலைஞா் கருணாநிதி ஆகிய தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,000, மூன்றாம் பரிசு ரூ. 5,000 வழங்கப்படும். இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா்கள் சென்னையில் மாநில அளவில் ஜூலை 12-இல் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.