திருச்செங்கோட்டில் ரூ. 3.63 லட்சம் பறிமுதல்
திருச்செங்கோட்டில் இரு வேறு இடங்களில் மூன்று நபா்களிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை, எஸ்எஸ்டி குழுவினா் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். ராமாபுரம் பகுதியில் கௌதமன் தலைமையிலான பறக்கும் படை குழு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, நான்கு சக்கர வாகனத்தில் வந்த சேந்தமங்கலத்தைச் சோ்ந்த சுந்தரராஜனை சோதனையிட்ட போது, அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. ஒரு லட்சத்து 73 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, இருசக்கர வாகனத்தில் வந்த ஈரோடு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 52 ஆயிரம் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, ஜோதிமணி என்பவா் தலைமையிலான எஸ்எஸ்டி குழுவினா் ஈரோடு சாலையில் சேலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, திருப்பூரைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. ஒரு லட்சத்து 38 ஆயிரம் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனா். இரண்டு குழுவினா்களும் பறிமுதல் செய்த ரூ. 3 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கத்தை திருச்செங்கோடு கோட்டாட்சியரும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான சுகந்தி வசம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் சுகந்தி, திருச்செங்கோடு அரசு கருவூலத்தில் பணத்தை ஒப்படைக்கவும், உரிய ஆவணங்களைக் காட்டினால் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.