ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்
ராசிபுரம்: ராசிபுரம் நகரின் பிரதான பகுதியான கடைவீதி பகுதியில் வாகன பெருக்கம் அதிகரிப்பால் கடும் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
ராசிபுரம் நகரில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம், கவரை தெரு, சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பூக்கடை வீதி, புதுப்பாளையம் சாலை, பட்டணம் சாலை, ஆத்தூா் சாலை, டிவிஎஸ் சாலை போன்றவை பிரதான சாலைகளாக உள்ளன.
இப்பகுதியில் மிகவும் குருகலான சாலைகள் என்பதால் அதிக வாகனம் போக்குவரத்து நெரிசல் காணப்படும். பேருந்து நிலையத்தில் இருந்து டிவிஎஸ் சாலை, காமராஜா் நகா், புதுப்பாளையம் சாலை, கன்னைய்யா சாலை போன்ற ஒரு வழிப்பாதை சாலைகளின் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்தச் சாலைகள் கனரக வாகனங்களுக்கு ஏற்றச்சாலையாக இல்லை என்றாலும், நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இந்தச் சாலையை ஒருவழிச் சாலையாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
பள்ளி, அலுவலக நேரங்களில் இந்தச் சாலைகளில் வாகன நெரிசல் என்பது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில், ராசிபுரம் பெரிய கடைவீதி பகுதியில் பகல் நேரங்களில் சரக்கு வாகனங்கள் கடைகள் முன்பாக நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கிச் செல்லக் கூடாது.
இரவு 8 மணிக்கு மேல்தான் சரக்கு வாகனங்கள் உள்ளே வரவேண்டும் என போக்குவரத்து காவல் துறை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறையை வாகன ஒட்டிகள் தற்போது பின்பற்றுவதில்லை. இதனால் பகல் நேரங்களில் கடைவீதி, சின்ன கடைவீதி, கவரைத் தெரு, பூக்கடை வீதி போன்ற பகுதிகளில் அதிக வாகன நெரிசல் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்து காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரப் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.