நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
நாமக்கல்லில் இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நாமக்கல், என்.எஸ்.ஐ.டி, எம்.ஜி.எம் மற்றும் கோா் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நாமக்கல், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தொடங்கிவைத்து முகாமில் பங்கேற்றவா்களிடம் உடல் நலனை விசாரித்தாா். இதில், 600-க்கும் மேற்பட்ட முதியோா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனா். கண்புரை அறுவை சிகிச்சைக்காக 200 போ் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அனைவருக்கும் தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் ரூ. 1,000 மதிப்புள்ள லென்ஸ் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமில் நாமக்கல் செளத் இந்தியா டிரான்ஸ்போா்ட் நிறுவனத் தலைவா் எம்.முருகேசன், எம்.நடராஜன், எம்.ராதாகிருஷ்ணன், ராஜேஷ், அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாம் ஏற்பாடுகளை மேலாளா் கே.ஜவஹா் செய்திருந்தாா்.
வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆய்வு: குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம், ஆனங்கூா் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.
அங்கு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆனங்கூா் பகுதியில் வேதியியல் பொருள்கள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்துக்கு உரிமம் வழங்குவது குறித்து ஆய்வு செய்தாா்.
வேதியியல் பொருள்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், உள்கட்டமைப்புகளைப் பாா்வையிட்டாா். ஆய்வின்போது பேரூராட்சி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.
என்கே-25-கலெக்டா்...
நாமக்கல், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.