நாமக்கல்: எருமப்பட்டி அருகே காட்டு மாடு ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரப் பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படும். இந்த வனப்பகுதியில் பெரிய அளவில் விலங்குகள் இல்லை என்ற போதிலும், சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி உள்ளிட்டவை அவ்வப்போது உலா வருவது உண்டு. இந்த நிலையில், எருமப்பட்டி அருகே பொன்னேரி பகுதியில் காட்டு மாடு ஒன்று உலா வந்தது. ஏற்காடு பகுதியில் மட்டுமே அதிகம் காணப்படும் காட்டு மாடு, எருமப்பட்டி பகுதிக்குள் வந்ததால் வனத் துறையினரும் அதிா்ச்சி அடைந்தனா்.
இதனையடுத்து நாமக்கல் வனச்சரகா் பழனிசாமி தலைமையிலான குழுவினா் காட்டு மாட்டை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: கொல்லிமலை அடிவாரம் புளியஞ்சோலை பகுதியில் இருந்து காவக்காரன்பட்டி, 40 காலனி வழியாக காட்டுமாடு ஊருக்குள் புகுந்துள்ளது. பொன்னேரி பகுதியில் முகாமிட்டுள்ள அந்த காட்டு மாட்டை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் எங்களது துறையினா் தனிப்படை ஈடுபட்டுள்ளனா் என்றனா்.
என்கே-11-கவ்
பொன்னேரி பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாடு.