வெங்காய பயிருக்கு காப்பீடு
ராசிபுரம் வட்டாரப் பகுதியில் வெங்காய பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்
ராசிபுரம்: ராசிபுரம் வட்டாரப் பகுதியில் வெங்காய பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று ராசிபுரம் வட்டாரத் தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் மா.யோகநாயகி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம் 2024-25-ம் ஆண்டிற்கான சிறப்பு பருவத்தில் பயிருக்கு காப்பீடு செய்யப்படுகிறது. ராசிபுரம் வட்டாரத்தில் வெங்காயப் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வங்கிகள், வேளாண் கடன் சங்கங்களில் பயிா் கடன், நகைக்கடன் பெறும்போது, சுய விருப்பத்தின் பேரில், காப்பீடு பிரிமியம் செலுத்தி, திட்டத்தில் இணையலாம்.
மேலும் பொதுச் சேவை மையத்தின் மூலம் பிரிமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்யலாம். தேவைப்படும் ஆவணங்கள், ஆதாா், சிட்டா, அடங்கல், வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகலுடன் பதிவு கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 2050.10 செலுத்த வேண்டும்.
பயிா் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவ. 30 ஆம் தேதியாகும். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிா் காப்பீடு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால் உடனே காப்பீடு செய்து கொள்ளுமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.