குட்கா பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’: ரூ. 25 ஆயிரம் அபராதம்
குட்கா பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’...
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.
நல்லூா் கந்தம்பாளையத்தில் கிழக்குத் தெருவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்து வருவதாக நல்லூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கடந்த 22-ஆம் தேதி காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் காவலா்கள் அந்த மளிகைக் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அதில், கடைக்குள் 9 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா பொருள்கள் பதுக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, நல்லூா் காவல் துறையினா் குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளா் ஜெயபாலை (47) கைது செய்து விசாரித்து வந்தனா்.
Advertisement
இந்த நிலையில், பரமத்தி வேலூா் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, நல்லூா் காவல் துறையின் உதவியுடன் ஜெயபால் மளிகை கடைக்கு ‘சீல்’ வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தாா்.