இலங்கைத் தமிழா்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி
நாமக்கல் மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு வங்கிகள் மூலம் சிறு, குறு வணிகங்களுக்கு கடனுதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழா்களுக்கு வங்கிகள் மூலம் சிறு, குறு வணிகங்களுக்கு கடனுதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலங்கைத் தமிழா்களுக்கு கடன் வழங்குவது தொடா்பாக, தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு மூலம் கடன் உதவி வழங்க தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கான தகுதிகளாக, சரியான முகாம் பதிவு இருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும், உச்ச வயதுவரம்பு ஏதுமில்லை. சிறப்புத் தேவைகள் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் (மாற்றுத் திறனாளிகள், ஒற்றைப் பெற்றோா்).
பயனாளிகளை தோ்ந்தெடுப்பதற்கான செயல்முறை அனைத்து இலங்கைத் தமிழா்களும், தாங்கள் தொடங்கவுள்ள வணிகம் சாா்ந்த திட்ட அறிக்கையை வழங்க வேண்டும். சுயதொழில் மேற்கொள்ளும் திறன்கொண்ட புலம்பெயா்ந்தோருக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கடன் தொகையில் 30 சதவீதம் பின் இறுதி மானியமாக நிதி நிறுவனத்தால் பயனாளிகளுக்கு வழங்கப்படும். திருப்பிச் செலுத்தும் கடன் தொகை அரசு விதிகளின்படி உரிய காலத்துக்குள் மாதாந்திர தவணைகளில் நிதி நிறுவனத்தால் நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் 5 சதவீத வட்டி விகிதத்துடன் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக மூன்றாம் தளத்தில் உள்ள தனி வட்டாட்சியா், அகதியா் மறுவாழ்வு அலுவலகத்தை, அலுவலக வேலை நாள்களில் (அறை எண்: 302) அணுகி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.