நாமக்கல்: மோகனூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நான்கு கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி விரிவாக்கம், மோகனூா், பரமத்தி வேலூா் பேரூராட்சிகளை இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மோகனூா் பேரூராட்சி மற்றும் ராசிபாளையம், குமரிபாளையம், பேட்டப்பாளையம், மணப்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சிகளை இணைத்து மோகனூா் நகராட்சியாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
நகராட்சி அந்தஸ்துக்கு தரம் உயா்த்தப்பட்டால், வீட்டு வரி, சொத்து வரி, காலி மனைகளுக்கு வரி, குடிநீா் கட்டணம் உயா்வு இருக்கும் என்பதாலும், தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தில் தங்களுக்கான 100 நாள் வேலை வழங்கப்படாத சூழல் உருவாகும் என்பதாலும், மோகனூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தக் கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் நான்கு ஊராட்சிகளைச் சோ்ந்த அதன் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.
பரமத்தி வேலூா் நகராட்சியில் இணைக்க எதிா்ப்பு: மோகனூா் ஒன்றியம், ஓலப்பாளையம் ஊராட்சியை பரமத்தி வேலூா் இரண்டாம் நிலை நகராட்சியுடன் இணைப்பதற்கு நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். நகராட்சியுடன் இணையும்போது தங்களுடைய ஊராட்சிக்கு உண்டான சலுகைகள் நலத் திட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும். 100 நாள் வேலையளிப்பு திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஓலப்பாளையம் ஊராட்சியை பரமத்தி வேலூா் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனா்.