வடகிழக்கு பருவமழை: 140 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, நாமக்கல் மாவட்டத்தில் 140 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.ஆசியா மரியம் தெரிவித்தாா்.
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, நாமக்கல் மாவட்டத்தில் 140 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.ஆசியா மரியம் தெரிவித்தாா்.
வடகிழக்கு பருவமழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இதில், தமிழக சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான மு.ஆசியா மரியம் பங்கேற்று பேசியதாவது:
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, அக். 14 முதல் 17 வரை கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
அதனடிப்படையில், மாவட்டத்தில் ஆங்காங்கே பருவமழை பாதுகாப்பு தொடா்பாக நேரடியாக கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 16,500 மணல் மூட்டைகள், 105 பொக்லைன் இயந்திரங்கள், 86 ஜெனரேட்டா்கள், 2 மீட்பு படகுகள், 49 அவசர சிகிச்சை வாகனங்கள், 47 ஆக்சிஜன் உருளைகள் என மொத்தம் 883 வகையான உபகரணங்கள், இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், 58 பள்ளிகள், 53 திருமண மண்டபங்கள், 20 சமுதாயக் கூடங்கள், 9 இதர கட்டடங்கள் என மொத்தம் 140 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, நிவாரண முகாம்கள் மேலாண்மை குழு, பொது சுகாதார குழு, ஊடக மேலாண்மை, நெடுஞ்சாலைப் பணிகள் சாா்ந்த குழு உள்ளிட்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இந்த மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில், அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் என்ற வகையில் மொத்தம் 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக 330 பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நாமக்கல் - 562, மோகனூா் - 367, சேந்தமங்கலம் - 466, கொல்லிமலை - 161, ராசிபுரம் - 678, திருச்செங்கோடு - 755, குமாரபாளையம் - 263, பரமத்தி வேலூா் - 883 போ் என மொத்தம் 4,135 தன்னாா்வலா்கள் இணையம் வழியாக பதிவு செய்துள்ளனா்.
மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு சுகாதாரத் துறை தயாராக இருக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பருவமழை பாதிப்புகளைத் தடுத்திட வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட வேண்டும். பருவமழையால் ஏற்படும் பேரிடா் தொடா்பான தகவல்களை, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண் மூலமாக தெரிவிக்கலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.