வடகிழக்கு பருவமழை: கால்நடைகளைப் பாதுகாக்க அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தியுள்ளாா்.
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கால்நடை வளா்ப்போா் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, மழைநீா் தேங்காமல் இருக்கும் மேடான பகுதிகளிலேயே கால்நடைகளை கட்டும் இடங்களாக பயன்படுத்த வேண்டும். மின் கம்பங்களிலோ அல்லது மின் கம்பங்களுக்கு அருகிலோ கால்நடைகளை கட்டுதல் கூடாது.
Advertisement
கால்நடைகள் கட்டும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்கு சுகாதாரமான நீா் மற்றும் தீவனங்களையே வழங்க வேண்டும். மழையின் தாக்கத்தால் கால்நடைகளில் நோய் தாக்கம் ஏற்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் கால்நடைகளை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
இடி, மின்னல், வெள்ளத்தால் கால்நடைகளுக்கு இறப்பு நோ்ந்தால், இழப்பீட்டுத் தொகை பெற தங்கள் பகுதிக்கு உள்பட்ட கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவித்து, பிரேத பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், கால்நடை அவசர ஊா்தியின் சேவையைப் பெற 1962 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.