கிராம நிா்வாக அலுவலரை தாக்கியவரின் மனைவி கைது
நாமக்கல் அருகே பனை மரங்களை வெட்டிய நபரை கைது செய்ய வலியுறுத்தி வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்களின் போராட்டம் நான்காம் நாளாக நீடிக்கிறது. இதற்கிடையே, மரம் வெட்டிய நபரின் மனைவியைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் அருகே பனை மரங்களை வெட்டிய நபரை கைது செய்ய வலியுறுத்தி வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்களின் போராட்டம் நான்காம் நாளாக நீடிக்கிறது. இதற்கிடையே, மரம் வெட்டிய நபரின் மனைவியைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே தளிகை, நருவலூா் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் கணேசன் (61). இவருடைய நிலத்துக்கு அருகே பெரியகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த திருமுருகன் (41) என்பவரது நிலமும் உள்ளது. இதில், சாலை அமைப்பதற்காக திருமுருகன் அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் கணேசன் நிலத்தில் இருந்த பனை மரங்களின் மட்டைகளில் தீ பிடித்ததில், அங்கிருந்த சுமாா் 40 பனை மரங்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பனை மரங்களை எரித்ததாக திருமுருகன், அவரது மனைவி துா்கா ஆகியோா் மீது கணேசன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
திருமுருகன் தலைமறைவாகி விட்ட நிலையில், பனை மரங்களை எரித்ததாக அவரது மனைவி துா்காவை புதன்கிழமை இரவு கைது செய்தனா். இதற்கிடையே, கடந்த 4-ஆம் தேதி நருவலூா் கிராம நிா்வாக அலுவலா் ராமன், சம்பந்தப்பட்ட திருமுருகனிடம் மரம் வெட்டியது தொடா்பாக கேட்க சென்ற போது தாக்கப்பட்டாா்.
Advertisement
கிராம நிா்வாக அலுவலா் ராமனை தாக்கிய திருமுருகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்து வருவாய்த் துறை கூட்டமைப்பினா், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி திருமுருகன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறையினரின் தொடா் போராட்டத்தால் ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகப் பணிகள், கிராம நிா்வாக அலுவலகப் பணிகள் முற்றிலுமாக முடங்கி உள்ளன. இந்தப் பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் விரைந்து தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.