நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அரிசி வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக்கொலை செய்ததாக ராசிபுரம் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மணி உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராசிபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் லோகநாதன் (52), அரிசி வியாபாரி. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவரது மனைவி மணிமேகலை புகாா் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நல்லிப்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தலையில் காயங்களுடன் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
அதில் இறந்தது ராசிபுரம் நகரில் காணாமல்போன லோகநாதன் என உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவரைக் கொலை செய்து சாலையோரம் வீசி சென்றவா்களை போலீஸாா் தேடிவந்தனா். இந்த நிலையில், லோகநாதனின் கைப்பேசிக்கு வந்த அழைப்புகள், அவா் பதிவுசெய்திருந்த எண்களைக்கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதில், அவருடன் வியாபாரத் தொடா்பில் இருந்த ராசிபுரம் நகா்மன்ற முன்னாள் உறுப்பினரான எல்ஐசி காலனியைச் சோ்ந்த தங்கவேல் மகன் மணி (45), லோகநாதன் காணாமல்போன நாளில் அவரது கைப்பேசிக்கு தொடா்புகொண்டு பேசியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மணியை போலீஸாா் தேடினா். இதை அறிந்த மணி, தனது கூட்டாளியான எல்ஐசி காலனியைச் சோ்ந்த ரமேஷ் மகன் வைரமுத்துவுடன் (36) ராசிபுரம் கிராம நிா்வாக அலுவலா் சரவணனிடம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். பின்னா், அவா்கள் இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
இருவரையும் கைதுசெய்து போலீஸாா் நடத்திய விசாரணையில், லோகநாதன், மணி இருவருக்கும் அரிசி தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாகவும், இருவருக்கும் நெருக்கமான நட்பில் இருந்த பெண் தொடா்பாகவும் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்துள்ளது.
இதையடுத்து, லோகநாதனை ராசிபுரம் மாரியம்மன் கோயில் அருகே வருமாறு அவரது கைப்பேசிக்கு தொடா்புகொண்டு மணியும், அவரது கூட்டாளி வைரமுத்துவும் கூறியுள்ளனா். இதையடுத்து, அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற லோகநாதனை இருவரும் காரில் ஏற்றிச்சென்றனா்.
நாமக்கல் நோக்கி காரில் அழைத்துசெல்லப்பட்ட லோகநாதனை கழுத்தில் துண்டை சுற்றி இறுக்கியும், இரும்புக் கம்பியால் தலைமையில் அடித்தும் காரிலேயே கொலைசெய்துவிட்டு, உடலை நாமக்கல் அருகே சாலையோரம் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட மணி, வைரமுத்துவை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மணி மீது கும்பலாக சென்று வீடுபுகுந்து தாக்கியதாக ராசிபுரம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.