பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மரம் அறுக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
நல்லூா் கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை பகுதியைச் சோ்ந்த செங்கோடன் மகன் முத்துசாமி (35), மரம் அறுக்கும் தொழிலாளி. இந்த நிலையில், மரம் அறுப்பதற்காக சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
மேல்சாத்தம்பூா் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.