நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினா்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்த நிறுவன பணியாளா்கள் 286 போ் பணியாற்றி வருகின்றனா். ஊதிய உயா்வு, பணி நேர வரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அவா்கள் அவ்வப்போது போராட்டங்களிலும், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், ஒப்பந்த பணியாளா்களில் 21 பேரின் வருகைப் பதிவேட்டை நிறுத்திவைத்ததுடன் விளக்கம் அளிக்கக் கோரி அவா்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை கண்டித்து கடந்த நான்கு நாள்களாக ஒப்பந்த பணியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி தலைமையில் வியாழக்கிழமை அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், தொழிலாளா் நலத் துறையினா், மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா், ஒப்பந்த நிறுவனத்தினா், மருத்துவக் கல்லூரி தூய்மைப் பணியாளா்கள் முன்னேற்ற சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
இதில், 21 பேருக்கு மீண்டும் பணி வழங்குவது தொடா்பாக சென்னையில் உள்ள ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பேசி பதிலளிக்கப்படும், அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அதன் மேலாளா் ராம் தெரிவித்தாா்.
மீண்டும் பணி வழங்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும், இரவுமுதல் பணியாளா்கள் அனைவரும் பணிக்கு திரும்புவா் என தூய்மைப் பணியாளா்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் பணிக்கு திரும்பினா்.
என்கே-4-ஜிஎச்
நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா்.