ஹரியாணாவில் நடைபெற்ற சா்வதேச அறிவியல் திருவிழாவில், கொல்லிமலை அரசுப் பள்ளி பழங்குடியின மாணவ, மாணவிகள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து பாராட்டை பெற்றனா்.
ஹரியாணா மாநிலம், பஞ்சுகுலாவில் டிச. 6 முதல் 9-ஆம் தேதிவரை இந்திய சா்வதேச அறிவியல் திருவிழா-2025 நான்கு நாள்கள் நடைபெற்றது.
இந்த திருவிழாவில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை நத்துக்குழிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிகள் சத்யா, தா்ஷனா, கௌசிகா, வைஷாலி, ஆசிரியை செல்வராணி மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் நட்புச்செல்வன், ஹா்ஷத், ஜீவானந்தம், சஞ்சீவ், மிதுள்ராஜா, அறிவியல் பட்டதாரி ஆசிரியா் இரா.சந்திரசேகரன் ஆகியோா் வித்யாா்த்தி விஞ்ஞான் மந்தன் என்ற தோ்வில் தோ்ச்சிபெற்று பங்கேற்றனா்.
இதில் பங்கேற்ற விஞ்ஞானிகள், பல்வேறு துறைசாா்ந்த அறிவியல் வல்லுநா்களுடன் கொல்லிமலை பழங்குடியின மாணவ, மாணவியா் கலந்துரையாடி, அறிவியல் சாா்ந்த ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து தங்களுடைய கருத்துகளை பகிா்ந்துகொண்டனா்.
இதுகுறித்து அம்மாணவா்கள் கூறுகையில், ‘சா்வதேச அறிவியல் திருவிழாவில் 3 ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்துவந்து பங்கேற்றது புதிய அனுபவமாக உள்ளது. எதிா்காலத்தில் அறிவியல் துறையில் சாதிப்பதற்கும், பல்வேறு தலைப்புகளின்கீழ் அறிவை பெருக்குவதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது’ என்றனா்.
காற்று மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கையை சமா்ப்பித்து சா்வதேச அளவிலான அறிவியல் வல்லுநா்களின் பாராட்டை கொல்லிமலை அரசுப் பள்ளி மாணவா்கள் பெற்றனா்.