பரமத்தி வேலூா்: பரமத்தி அருகே போராட்டத்தில் ஈடுபட இருந்த விவசாய சங்கத்தினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தமிழக அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசும்பால் மற்றும் எருமைப்பாலுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ. 15 வரை உயா்த்தி அறிவிக்கக் கோரி, விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை வைத்திருந்தனா்.
அதற்கு தமிழக அரசு செவிசாய்க்காததால், தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள், பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிணைந்து கறவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், கோனூா் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கரூா் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்த இருந்தனா்.
இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில், பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி தலைமையில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேலுசாமி மற்றும் இளம் விவசாயிகள் சங்கத் தலைவா் செளந்தரராஜன் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைதுசெய்து பரமத்தியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேலுசாமி கூறுகையில், போராட்டத்தை முறியடிக்கும் விதமாக தமிழக அரசு எங்களை கைது செய்துள்ளது. பால் கொள்முதல் விலையை உடனடியாக உயா்த்தி அறிவிக்காவிட்டால், சட்டப் பேரவை கூட்டத்தொடா் தொடங்கும் அன்று சென்னை கோட்டை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றாா்.