கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயற்கை பானங்களை பருக வேண்டும், தளா்வான ஆடைகளை அணிய வேண்டும் என அரசு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டைப்போல, நிகழாண்டிலும் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் கொடுமை உச்சத்தைத் தொடலாம். தற்போதே பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 102, 104 டிகிரியாக காணப்படுவதால் வெப்பம் மக்களை வாட்டி வருகிறது.
இந்த காலக்கட்டங்களில் குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியோா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அரசு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக நாமக்கல் அரசு மருத்துவா்கள் கூறியதாவது:
கோடை வெயிலின் வெப்ப கதிா்வீச்சு மனிதனுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தற்போது 102 டிகிரி வெயில் கொளுத்துகிறது. வானம் மந்தமாக காணப்பட்டாலும் புழுக்கத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளா்வான மற்றும் வெளிா் நிற ஆடைகளை பொதுமக்கள் அணிந்திட வேண்டும்.
வெளியில் செல்லும்போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிா் கண்ணாடி போன்றவற்றை பயன்படுத்தலாம். பயணம் செய்கையில் குடிநீா் கட்டாயம் எடுத்துச் செல்வது அவசியம். உடல் வெப்பத்தைத் தணிக்க அவ்வப்போது தண்ணீா், மோா், எலுமிச்சை சாறு, கஞ்சி, கம்பங்கூழ், பழச்சாறு, இளநீா், ஓ.ஆா்.எஸ் கரைசல் ஆகியவற்றை அருந்தி வரலாம். குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியோா் மற்றும் உடல்நலம் குன்றியவா்களை வெப்ப தாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். கோடை காலத்தின்போது வெப்பவாத நோய் தாக்கும் ஆபத்து உள்ளது.
நமது வசிப்பிடத்தில் பகல் நேரங்களில் திரைச் சீலைகள், கூடாரங்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும், காற்றோட்டத்துடன் குளிா்ச்சியான இடமாக இருக்குமாறும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
திறந்தவெளிகளில் பணியாற்றுவோா் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும், அடிக்கடி குளிா்ந்த நீரில் குளிக்க வேண்டும். கடும் வெயில் நேரத்தில் (நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை) சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். கால்நடைகளை (ஆடு, மாடு) நிழலில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். கால்நடைகளுக்குத் தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும்.
குழந்தைகளை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் நிழல் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
தொழில் நிறுவனங்கள், தங்கள் பணியாளா்களை மதிய வேளையில் கடும் வெயிலின்போது, பொது வெளியில் பணியமா்த்துவதைத் தவிா்க்க வேண்டும். வெயிலால் ஏற்படும் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும்.
கடும் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையோ, செல்ல பிராணிகளையோ செல்ல அனுமதிக்க வேண்டாம். அடா்த்தன்மையுடைய ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடினமான வேலைகள் செய்வதைத் தவிா்க்க வேண்டும். உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காஃபி, தேநீா், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிா்பானங்கள், மது ஆகியவற்றை அருந்தக்கூடாது. வரும் மாதங்களில் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றனா்.