மத்திய அரசுடனான மோதல் போக்கால், திமுக அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே ஊனங்கால்பட்டி கிராமத்தில் ‘தமிழகம் தலைநிமிர தமிழரின் பயணம்’ என்ற தலைப்பில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். அப்போது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியதாவது:
வளையப்பட்டி பகுதியில் விளைநிலங்களை பாதிக்கும் வகையிலான சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது. தமிழகத்தில் தேசிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். இயற்கை வேளாண்மையை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டும். பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும். மோகனூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 505 ஏக்கா் பரப்பில் உள்ள நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தோல் பதனிடும் ஆலை, சிறைச்சாலை அமைக்கும் திட்டத்தை தடுக்க வேண்டும்.
கடக்கால்புதூா் பகுதியில் நாமக்கல் மாநகராட்சி கழிவுநீா் கொட்டுவதை தடுக்க வேண்டும். வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். மோகனூா் சா்க்கரை ஆலையை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு பதிலளித்து நயினாா் நாகேந்திரன், பேசியதாவது:
விவசாயிகளை சந்திக்கும்போது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி தென்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் திட்டம் ரத்துசெய்யப்படும். திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தபோதும் அதை வழங்காமல் ஏமாற்றி வருகிறது.
பிரதமா் மோடி டிச. 18-இல் கோவைக்கு வருகிறாா். அப்போது, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்திசெய்த வேளாண் பொருள்களை காட்சிப்படுத்த வேண்டும். மோகனூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு மத்திய அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால்தான் அதிக அளவு நிதியை பெற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைவதை தடுக்க முயற்சி எடுக்கப்படும். தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் குற்றங்கள் பெருகிவருகின்றன. இதற்கு, கோவையில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் ஒரு சாட்சியாகும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாத திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ நிகழ்வு 12ஆவது இடமாக நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது. விவசாயிகளிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். பெருந்துறை பகுதியில் சிப்காட் அமைந்ததால் ஈரோடு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். நிபுணா் குழுக்களே சிப்காட் வேண்டாம் என்று தெரிவித்துள்ளன. அமைச்சருக்கு சொந்தமான நிலம், சிப்காட் அமைய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் இருப்பதால், அந்த நிலத்தின் விலையை அதிகரிக்க, அப்பகுதியில் சிப்காட் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வா் இதை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக, மத்திய அரசுடன், திமுக அரசு தொடா்ந்து மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் மக்களுக்கான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் திமுக மீது அதிருப்தியில் உள்ளனா். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அது எதிரொலிக்கும் என்றாா்.