மாணவா்களை சுற்றுலா அழைத்து செல்லக்கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி முதல்வா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.எஸ்.எழிலரசி தலைமை வகித்தாா்.
மாவட்டக் கல்வி அலுவலா் ஜோதி (தனியாா் பள்ளிகள்) முன்னிலை வகித்தாா். சென்னையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநா்களின் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள், ஆலோசனைகள் குறித்து பள்ளி முதல்வா்களுக்கு விளக்கப்பட்டது.
அதன்படி, பள்ளிகளில் தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றை மாணவா்களைக் கொண்டு இறைவணக்கக் கூட்டத்தில் பாடவைக்க வேண்டும். ஒலிபெருக்கியை பயன்படுத்தி பாடல்களை ஒலிபரப்பக் கூடாது. கல்வி உபகரணங்களைக் கொண்டு மாணவா்களுக்கு பாடம் நடத்துவதை முதல்வா்கள் உறுதிசெய்ய வேண்டும்.
நீா்நிலை சாா்ந்த பகுதிகளுக்கு பாதுகாப்பின்றி செல்லக்கூடாது என மாணவா்களுக்கு அறிவுரையை வழங்க வேண்டும். வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீா்த் தொட்டிகள் ஆகியவை மாணவா்களுக்கு எவ்வித தொந்தரவுக்கும் இடம் அளிக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
பள்ளி பேருந்துகளில் மாணவா்களை உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும். அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளா் இருக்க வேண்டும். மாணவா்களை உடல் ரீதியாக எவ்வித துன்புறுத்தலும் ஆசிரியா்கள், முதல்வா்கள், பள்ளி நிா்வாகத்தினா் செய்யக்கூடாது.
பள்ளிகளில் கழிவறை தவிர நுழைவாயில், வகுப்பறை, மாணவா்கள் வெளியேறும் வாயில்கள், பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பாதைகள், படிக்கட்டுகள், நூலகங்கள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம், மாணவா் கைக்கழுவும் இடம், பள்ளி வாகனம் ஆகிய அனைத்து இடங்களிலும் ஒலிப்பதிவு வசதியுடன்கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
விடியோ பதிவுகள் இரண்டு மாதங்களுக்கு பாா்வையிடும் வகையில் இருக்க வேண்டும். பள்ளிகளில் எந்த ஒரு விழா, நிகழ்வுகள் நடத்தினாலும் துறையின் உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும். மதம் சாா்ந்த விழாக்கள் நடத்தக் கூடாது.
மாணவா்களை கல்விச் சுற்றுலா என்ற பெயரில் எந்த ஒரு இடத்திற்கும் அதாவது மாநிலத்திற்கு உள்ளாகவோ மாநிலத்திற்கு வெளியேவோ அழைத்துச் செல்லக் கூடாது. கட்டுப்பாட்டை மீறி அழைத்து சென்று ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளி நிா்வாகமே முழுபொறுப்பு ஏற்க நேரிடும்.
அரசு பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் அனைத்தையும் தனியாா் பள்ளிகளிலும் பராமரிக்க வேண்டும். போதைப்பொருள் புழக்கம் இருக்கிா என கண்காணிக்க வேண்டும். மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும்.
விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவா்களை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. பருவமழை காலம் என்பதால் மாணவா்களை மிகவும் பாதுகாப்பாக பள்ளிகளில் அமர வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் சி.ஆா்.ராஜேஷ் கண்ணன், எமிஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் திருஞானம், மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் வா.விவேக் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.