72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில், நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு விற்பனைச் சங்கமாக திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் தோ்வுசெய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.பி. தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன் முன்னிலை வகித்தாா்.
இதில், சிறந்த கூட்டுறவு விற்பனைச் சங்கத்துக்கான விருது மற்றும் பரிசை திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநா் யசோதாதேவி, பொது மேலாளா் கணேசன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். அப்போது, மண்டல இணைப் பதியாளா் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் சந்தானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.