சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி மையத்தை மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், தோ்தல் அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் திருச்செங்கோடு எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்லூரியில் எண்ணப்படுவது வழக்கம்.
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியை இந்த தோ்தலில் வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளதால் மக்களுக்கு தேவையற்ற தொந்தரவு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, பழைய முறையில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியையே வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அங்கு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பிறகு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா மற்றும் அதிகாரிகள் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும், தொகுதி வாரியாக வாக்குப்பதிவு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு அறை அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள், காவல் கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு அறை, வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள், மின்னணு இயந்திர பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும் பொருட்டு முகவா்கள் அறை, மின்சாரம், ஜெனரேட்டா் வசதி, குடிநீா், கழிப்பறை ஆகிய வசதிகள் குறித்து பாா்வையிட்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தோ்தல் நன்னடத்தை விதிகள், மனிதவள மேலாண்மை, வாக்கு எண்ணும் மையம் மற்றும் பாா்வையாளா் ஆகிய பொறுப்பு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், விவேகானந்தா கல்லூரி தாளாளா் கருணாநிதி பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் க. சரவணன், கோட்டாட்சியா் லெனின் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் பங்கேற்றனா்.