எருமப்பட்டியில் உள்ள அரசு மதுக்கடைகளை அகற்றி, பொன்னேரி கிராமத்தில் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி நகரின் மையப் பகுதியில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரி 5 சாலைப் பகுதியில் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறையினா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் அடிப்படையில், 90 நாள்களுக்குள் 2 மதுக்கடைகளையும் இடமாற்றம் செய்கிறோம் என உறுதியளித்தனா். ஆனால் திங்கள்கிழமை வரை அந்தக் கடைகள் அகற்றப்படவில்லை. இதனால், கடை முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட அங்குள்ள மக்கள் முடிவு செய்துள்ளனா்.
இதற்கிடையே, எருமப்பட்டியில் அகற்றப்படும் இரண்டு மதுக்கடைகளையும், பொன்னேரி கிராமத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் கூறியதாவது: மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் வழியில் அரசு மதுக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதனால் தேவையற்ற பிரச்னைகள், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம், பொன்னேரி பகுதியில் மதுக்கடைகள் அமைக்க தடைவிதிக்க வேண்டும் என்றனா்.