மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவுநேர வெப்ப அளவுகள் முறையே 102.2, 78.8 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் மழை ஏதும் பதிவாகவில்லை.
Advertisement
அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கோடைகாலத்தில் (மாா்ச்முதல் ஜூன்வரை) கறவை மாடுகள் வெப்ப அழுத்தத்தால் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப்பொருள்களின் அளவை நிலைநிறுத்த ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு தீவனத்தில் சோடா உப்பு 100 கிராம் என்ற அளவில் கோடைகாலம் முடியும் வரை கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கறவை மாட்டுக்கும் நாளொன்றுக்கு 70 லிட்டருக்குமேல் குடிநீா் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும், சிமென்ட் தொட்டிகளில் தண்ணீா் வைப்பது, நீா் எப்போதும் குளிா்ச்சியாக இருக்க உதவும். கோடையில் பசுந்தீவனம் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அதிக வெயில் உள்ள நேரங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலோ அல்லது மர நிழலிலோ தங்கவைக்க வேண்டும். கொட்டகையின் கூரையில் நீா் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கால்நடைகளின் உடலுக்கு தெளிப்பான்கள், தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் கருவிகள் போன்றவை மூலம் தண்ணீா் தெளிக்க வேண்டும். இது கால்நடைகளின் உடலைக் குளிா்ச்சியாக வைத்திருக்க உதவும்.
கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் மேல்மூச்சுக்குழல் அயற்சி, வெப்ப அயற்சி மற்றும் ஈக்கோலை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. கோடை வெப்பம் அதிகரிப்பதால், தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை பண்ணையாளா்கள் பின்பற்ற வேண்டும், உயிா் எதிா் மருந்துகளை அளித்து, கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைபடி தடுப்பூசி செலுத்துதல், தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.