முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 89.46 % வாக்குப்பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை 6 தொகுதிகளிலும் மொத்தம் 89.46 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:29 AM
வாக்காளர் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை 6 தொகுதிகளிலும் மொத்தம் 89.46 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. இங்கு, 6,41,118 ஆண் வாக்காளா்களும், 6,82,427 பெண் வாக்காளா்களும், 208 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 13,23,753 வாக்காளா்கள் உள்ளனா். தோ்தலில் வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 725 இடங்களில், 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3,902 எண்ணிக்கையிலும், 2,133 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,312 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை அமைதியான முறையில் நடைபெற்றது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 7 மணி முதல் 11 மணி வரையில் வாக்காளா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினா். ஆண்கள், பெண்கள், முதியோா், கல்லூரி மாணவ, மாணவியா், திருநங்கையா் என அனைவரும் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். மதியம் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Advertisement

காலை 9 மணி நிலவரப்படி (சதவீத அடிப்படையில்): ராசிபுரம்- 19.06, சேந்தமங்கலம்- 18.83, நாமக்கல்- 19.16, பரமத்திவேலூா்- 18.62, திருச்செங்கோடு- 21.03, குமாரபாளையம்- 22.46, சராசரி- 19.85.

காலை 11 மணி நிலவரப்படி: ராசிபுரம்- 40.29, சேந்தமங்கலம்-39.72, நாமக்கல்-39.96, பரமத்தி வேலூா்- 39.62, திருச்செங்கோடு- 43.17, குமாரபாளையம்-45.87 என சராசரி வாக்குப்பதிவு 41.41 சதவீதமாக இருந்தது.

1 மணி நிலவரப்படி: ராசிபுரம்-60.81, சேந்தமங்கலம்-61.15, நாமக்கல்-60.36, பரமத்தி வேலூா்-60.51, திருச்செங்கோடு-64.80, குமாரபாளையம்- 67.63 என சராசரியாக 62.51 சதவீதம் பதிவாகின.

3 மணி நிலவரப்படி: ராசிபுரம்- 75.45, சேந்தமங்கலம்-74.96, நாமக்கல்-74.35, பரமத்தி வேலூா்-75.55, திருச்செங்கோடு-77.87, குமாரபாளையம்- 80.67 என சராசரியாக 76.43 சதவீதம் பதிவாகியிருந்தது.

5 மணி நிலவரப்படி: ராசிபுரம்- 87.53, சேந்தமங்கலம்- 86.41, நாமக்கல்- 85.43, பரமத்தி வேலூா்- 87.62, திருச்செங்கோடு- 88.06, குமாரபாளையம்- 90.98 என சராசரியாக 87.63 சதவீதம் பதிவாகியிருந்தது.

இறுதி நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் மொத்த வாக்குப்பதிவு சதவீதம்- 89.46. கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில், நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 80.04 சதவீத வாக்குகள் பதிவானது. அதைகாட்டிலும் தற்போது 9.42 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.