முகப்பு
நாமக்கல்

நாமக்கல் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:10 AM
நாமக்கல் கொசவம்பட்டி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு நிலைய வீரா்கள்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:33 PM

நாமக்கல் மாநகராட்சி கொசவம்பட்டி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகள், கூடுதலாக இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளில் சேகரமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை துப்புரவுப் பணியாளா்கள் என்.கொசவம்பட்டியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டுவந்து சோ்க்கின்றனா். அங்கு தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு தேவைகளுக்காக வெளிச்சந்தைகளில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. தேவையற்றவை மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:10 AM

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கொசவம்பட்டி கிடங்கில் தேங்கிய குப்பை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பாா்த்த அக்கம் பக்கத்தினா் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களும், நெகிழிகளை பிரித்தெடுக்கும் எந்திரமும் எரிந்து சேதமடைந்தன.

Advertisement

அங்கு தீயணைப்பு நிலைய அலுவலா் நல்லதுரை தலைமையில் வந்த வீரா்கள் ஒன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

குப்பையில் கிடந்த வெடிபொருள் வெயிலின் தாக்கத்தால் வெடித்ததாகவும், அதனால் தீப்பற்றி எந்திரங்கள், தேங்கிய குப்பைகள் எரிந்ததாகவும், உயிரிழப்பு ஏதுமில்லை எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.