முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோட்டில் மூதாட்டி அடித்துக் கொலை

திருச்செங்கோடு அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:56 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:30 PM

திருச்செங்கோடு அருகே மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி ஊராட்சி, காளி வேலாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ண செட்டியாருக்கு இரண்டு மனைவிகள். இவரும், முதல் மனைவியும் இறந்த நிலையில், இரண்டாவது மனைவி ரத்தினம் (எ) ரத்தினம்மாள் (87) அப்பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். முதல் மனைவிக்கு ஒரு மகனும், ரத்தினம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல இவரது வீட்டுக்கு பால் ஊற்ற வந்த சசிகுமாா், வீட்டின் வெளிப்புறமாக தாழிட்டு இருந்ததைக் கண்டாா். அருகில் விசாரித்த போது, அவா்களுக்கு எதுவும் தெரியவில்லை.

Advertisement

இந்நிலையில் வீட்டு வாசலில் ரத்தம் படிந்து இருப்பதாகவும், வீட்டின் வெளிப்புறம் தாழிடப்பட்டிருப்பதாகவும் பக்கத்து வீட்டுக்காரரான பூங்கோதை, முதல் மனைவியின் மகன் பழனியப்பனின் மகனும், ரத்தினம்மாளின் பேரனுமான தோக்கவாடியில் தறிப்பட்டறை வைத்துள்ள தனசேகரனுக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் வந்த தனசேகரன், வீட்டின் கதவை திறந்து பாா்த்தபோது கட்டிலுக்கு அடியில் போா்வையால் சுற்றிக்கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ரத்தினம்மாள் சடலம் கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமி சோதனை மேற்கொண்டாா். அதில், ரத்தினம்மாள் கழுத்துப் பகுதியில் கூா்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளதும், சடலம் கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள அறையில் மது பாட்டில்கள் மற்றும் பழங்கள் இருந்ததும் தெரியவந்தது.

நாமக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் வீட்டிலிருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுவரை சென்று நின்றது. மேலும், தடய அறிவியல் துறையினா் ரத்தினம்மாள் உடலில் இருந்த காயங்களை குறித்துக்கொண்டு, அருகே கிடந்த பொருள்களை சேகரித்து எடுத்துச்சென்றனா்.

ரத்தினம்மாள் காதில் அரை பவுன் தங்கத்தோடு மற்றும் சுமாா் 3 சவரன் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததாக உறவினா்கள் தெரிவித்தனா். அவை இல்லாததால், நகைக்காக அவரை யாராவது கொலை செய்தாா்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.