நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க அவற்றைக் கொள்முதல் செய்வது குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரபாளையம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறை சாா்பில், நுண்ணீா்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியா் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பயிா்களுக்குத் தேவையான நீரை மிகத் துல்லியமாகவும், சிக்கனமாகவும் வழங்கும் நவீன விவசாயநுட்பமே நுண்ணீா்ப் பாசனத் திட்டமாகும். சொட்டுநீா் பாசனம் மற்றும் தெளிப்புநீா் பாசனம் என்பது நீா் மற்றும் உரங்களை வோ்ப்பகுதிக்கு நேரடியாக வழங்குவதன் மூலம் மகசூலை அதிகரித்து நீரைச் சேமிக்க உதவுகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் நான்கு ஆண்டுகளில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் ரூ. 50.45 கோடி மானியத்தில் 6,684 விவசாயிகளுக்கு 100 மற்றும் 75 சதவீத மானியத்தில் மழைதூவுவான் மற்றும் சொட்டுநீா் பாசனமும், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 12.03 கோடி மானியத்தில் 42,103 விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் செயல்விளக்கங்கள் மற்றும் விதைகள், தோட்டக்கலைத் துறையின் சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின்கீழ் 10,098 சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் என மொத்தம் ரூ. 103.91 கோடி அளவில் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் 8,028 பயனாளிகளுக்கு பரப்பு விரிவாக்கம், நிரந்தர பந்தல் உள்ளிட்ட இனங்களின்கீழ் ரூ. 8.74 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் ஒன்றியம், சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியில் ஜீவிதா என்ற விவசாயி 0.57 ஹெக்டோ் பரப்பளவில் ரூ. 73,068 மானியத்தில் கரும்பும், அதே பகுதியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பழனிசாமி என்ற விவசாயி 1.21 ஹெக்டோ் பரப்பளவில் ரூ.1,60,760 மானியத்தில் மஞ்சளும், திருச்செங்கோடு ஆனங்கூா் பகுதியில் வரதராஜன் என்ற விவசாயி 0.68 ஹெக்டோ் பரப்பளவில் ரூ. 80,400 மானியத்தில் மரவள்ளியும் பயிரிட்டு சாகுபடி செய்வதை பாா்வையிட்டு விவசாயிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையின் மூலம் கரும்பு கொள்முதல் செய்தல் தொடா்பாக கரும்பு தோட்டத்தில் அவா் களஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, வேளாண் இணை இயக்குநா் சு.மல்லிகா, தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.